வெள்ளி, மே 25

பயமற்ற சூரியக் குளியல்…




10
மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்கு வரும் பலரும் கடற்கரையோரங்களில் குறைந்த பட்ச ஆடைகளோடு சூரிய ஒளிக் குளியலில் லயித்திருப்பது சகஜம்.
நமது நாட்டிலும் சூரியக் குளியல் மற்றும் சூரிய ஒளியில் ஓய்வு எடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்கூடு.
இந்த சூரியக் குளியலில் பல்வேறு நன்மைகள் உண்டு. மிக முக்கியமான நன்மை வெயிலில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி. அதேபோல இந்த சூரியக் குளியலில் பல்வேறு தீமைகளும் உள்ளன. அவற்றில் முக்கியமானது “சன் பர்ன்” எனப்படும் வெப்பத்தினால் உடலில் தோல் சிவந்து போய் கொப்புளங்களோ, புண்களோ வருவது.
சிலருக்கு மிகவும் மிருதுவான தோல், விரைவில் சிவந்து போய்விடும். சிலருடைய தோல் வெப்பத்தை அதிகம் கிரகித்துக் கொள்ளும். இது தான் சூரியக் குளியல் நடத்துவோரின் மிகப்பெரிய சிக்கல்.
எவ்வளவு நேரம் வெயிலில் இருக்கலாம், எப்போது நிழலில் போகவேண்டும் ? போதுமான அளவு வெயிலில் இருந்து விட்டேனா என்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்குமே என கலங்கியிருந்த சூரியக் குளியல் பிரியர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது இந்த புதிய கண்டுபிடிப்பு.
சின்ன ஒரு பிரேஸ்லெட் போன்ற இந்த மெல்லிய ஸ்டிரிப் ஒன்றை நமது கைகளில் கட்டிக் கொண்டால் நமது உடல் ஒத்துக் கொள்ளும் அளவுக்கு அதிகமான வெயில் தாக்கும் போது இந்த ஸ்ட்ராப் “பிங்க்” நிறமாக மாறிவிடுகிறதாம்.
வெயிலிலுள்ள புற ஊதாக்கதிர்களின் அளவைக் கிரகித்தும், நமது தோலின் தன்மையை அறிந்தும் இந்த கருவி செயல்படுகிறதாம்.
சூரிய வெப்பம் தாக்கிவிடுமோ எனும் பயத்தில் தேவையற்ற கிரீம்களை உடலில் பூசிக்கொள்வதோ, தேவையான அளவு வெயிலை ரசிக்க முடியாமல் போவதோ இதன் மூலம் முழுமையாக தவிர்க்கப்படும் என்பது சிறப்புச் செய்தியாகும்.
புற உதாக் கதிர்களின் தாக்கம் பல வகை தோல் புற்றுநோய்களுக்குக் கூட காரணமாகி விடுகிறது, இந்த எளிய ஸ்ட்ராப், நம்மை எச்சரிக்கை செய்வதன் மூலம் புற ஊதாக்கதிர்கள் அதிகமாய் தாக்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
மிகவும் மலிவாக, ஒரு சில ரூபாய்கள் எனும் விலையில் இந்தப் பொருள் விற்பனைக்கு வர இருக்கிறது.
கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் இந்த கண்டு பிடிப்புக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இது தாண்டா டூ வீலர் !


twoகொஞ்ச தூரத்துல இருக்கிற கடைத் தெருவுக்குப் போகவேண்டும். ஆனால் கார் எடுத்துக் கொண்டு செல்ல முடியாத ஒரு நிலை. சின்னதா ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்குமே என மனதுக்குள் சிந்தனை ஓடும்.
நகர் முழுதும் வாகன நிறுத்தம் ஒரு மிகப்பெரிய சவால். வண்டி சின்னதா இருந்தா நிறுத்தியிருக்கலாம் என புலம்பல் தெறிக்கும்.
எரிபொருள் பர்சை எரித்து விடுகிறது, கொஞ்சம் செலவு குறைவான வண்டி இருந்தால் நன்றாக இருக்குமே என பெருமூச்சு வழியும்.
இந்த அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதற்குரிய ஒரு புது வகையான இருசக்கரக் கார் ஒன்று வரப்போகிறது.
பக்கத்து தெருக்களில் சுற்றவும், அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று வரவும் , அதிக தூரமற்ற இடங்களுக்கு பயணிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படும் இந்த வாகனம் மின் சக்தியில் இயங்கப்போகிறது என்பதும், சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதது என்பதும் சிறப்பு அம்சங்களாகும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். உயர் ரக சமநிலைத் தொழில் நுட்பம் _mg_6017இருசக்கரத்தில் இந்த வாகனம் நிலைகொள்ளவும் வேகமாய் இயங்கவும் துணை செய்கிறது.
உயர் கணினி தொழில் நுட்பத்தில் தயாராகவுள்ள இந்த வாகனம், விபத்துகள் ஏற்படும் சூழலைத் தவிர்க்கக் கூடிய ஆற்றல் படைத்ததாக இருக்குமாம்.
அளவில் சிறிய வியக்க வைக்கக்கூடிய வடிவத்தில் குறைந்த செலவில் ஓடும் இந்த வாகனத்தின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் ஒரு கார்வாங்கும் விலையில் இந்த வாகனம் மூன்று நான்கு வாங்கலாம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
oneசெக்வே மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த வாகனம் விற்பனைக்கு வர இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம் !

சீரியஸா ஒரு சிரிப்பு சமாச்சாரம் !

தினமும் கொஞ்ச நேரம் குழந்தைகள் மனம் விட்டுச் சிரித்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள் என்கிறது ஆனந்தமூட்டும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.
சிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் எனும் செய்தியுடன் கூடவே, சிரிப்பு குழந்தைகளுக்கு தரும் “டானிக்” போன்றது எனவும் இந்த ஆராய்ச்சி சிரிப்பைக் குறித்து விவரித்து வியக்க வைக்கிறது.hero__3_1
தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைகின்றனவாம், இதனால் உடல் ஆரோக்கியமடைகிறது என்கின்றனர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள்.
அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஏதேனும் ஒரு நகைச்சுவைப் படத்தை அரைமணி நேரம் பார்த்தாலே போதும் என வழிமுறையையும் அவர்கள் சொல்லித் தருகின்றனர்.
மன அழுத்தம், நீரிழிவு நோய், உயர் குருதி அழுத்தம் போன்ற சிக்கல்கள் உள்ள பலருக்கு “தினம் அரை மணி நேரம் சிரிப்பு” என சோதனை நடத்தியதில் அவர்களுடைய உடலில் இருந்த அழுத்தம் தரக்கூடிய மூலக்கூறுகள் படிப்படியாகக் குறைந்து உடல் மிகவும் ஆரோக்கியமானதாக மாறிவிட்டதாம்.
சிரிக்கும் போதும், ஆனந்தமாய் உணரும் போதும் உடலில் நிகழும் வேதியல் மாற்றங்களே இந்த மாற்றத்துக்கான விதைகளைத் தூவுகின்றன. குறிப்பாக மகிழ்ச்சியளிக்கும் எண்டோர்பின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் பெர்க்.
மனம் விட்டுச் சத்தமாய் சிரிப்பது உடலிலுள்ள இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியையும் தருகிறது என்பது சிறப்பம்சமாகும். இதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் அதிகரிக்கின்றனவாம்.
அதே நேரத்தில் மிக அழுத்தமான அழுகாச்சிப் படங்களைப் பார்க்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் உடலுக்குத் தீமைகளை விளைவிக்கின்றனவாம். அப்படிப் பட்ட படங்களைப் பார்க்கும் போது இதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பெருமளவு குறைவது இதன் ஒரு காரணம் என்கின்றார் மருத்துவர் பெர்க்.
நல்ல ஆரோக்கியம் வேண்டுமா, தினம் ஒரு நல்ல நகைச்சுவைப் படம் பாருங்கள் என்கிறார் மெரிலண்ட் ஆராய்ச்சிக் கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் மில்லர்.

ஒட்டக வரலாற்றில் முதன் முறையாக….




one
உயிரிகளைப் பிரதியெடுக்கும் குளோனிங் முறைக்கு உலகெங்கும் எதிர்ப்புகள் எழுந்தாலும் இன்றும் உலகின் பல பாகங்களிலும் அதன் முயற்சிகளும், தொடர்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.
டோலி எனும் ஆட்டுக்குட்டி குளோனிங் முளையைத் துவக்கி வைத்தது. இப்போது உலகிலேயே முதன் முதலாக ஒட்டகம் ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்ஜாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒட்டகம் துபாயிலுள்ள ஒட்டக விருத்தி நிலையத்தில் உலகை வியப்புடன் பார்க்கிறது.
கோடிக்கணக்கான ஒட்டகங்கள் வாழ்ந்த இந்த பூமியில் இந்த ஒட்டகம் ஒரு புதிக சகாப்தத்தின் முதல் சுவடாய் வந்திருக்கும் உண்மையை அறியாமலேயே தாயுடன் விளையாடுவதை விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.
ஒரு பெண் ஒட்டகத்தின் செல்லில் இருந்து பிறவி எடுத்துள்ள இந்த ஒட்டகத்துக்குப் பிறந்த நாள் ஏப்பிரல் 8.

வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் !



technology-how-to-take-great-photos-on-y
செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !
பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.
இந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.
அதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.
சக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது
இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.
தனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலுமுள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.
“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.
போதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.
இன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.
இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன. உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.
சில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.
கம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.
நவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.
x
நம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?
1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.
3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.
4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.
5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.
8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.
9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.
10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.
11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் !
12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.
13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.
14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.
எல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

கன்னத்தைத் தொட்டும் படம் வரையலாம்…. !

ஒரு வண்ணத்துப் பூச்சி உங்கள் கையில் இருக்கிறது, அதை படமாக வரைய நினைக்கிறீர்கள். கோடுகளால் அவுட்லைன் வரைந்து முடித்த பிறகு தான், ஆஹா… இந்த நிறத்துக்கு எங்கே போவது என குழம்பிப் போய் முடியைப் பிய்த்துக் கொள்வீர்கள் !
இலையுதிர்காலத்தில் அமெரிக்காவின் ஒரு காட்டுப் பகுதியில் நடக்கிறீர்கள், வண்ண வண்ண இலைகளைப் பார்த்து பிரமிக்கிறீர்கள். அதை ஓவியமாய் தீட்ட அமர்ந்தால் அங்கும் நிறப் பற்றாக்குறை உங்களை ஆட்டிப் படைக்கும்.
இப்படிப்பட்ட தவிப்புகள் இனிமேல் இருக்காது என தோன்றுகிறது. எந்த நிறம் வண்ணத்துப் பூச்சியிடம் இருக்கிறதோ, அதை அப்படியே தொட்டு உங்கள் காகிதத்தில் வரையக் கூடிய தொழில் நுட்பம் வந்திருக்கிறது.
கொரியாவிலுள்ள ஜின்சன் பார்க் என்பவர் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில் நுட்ப பேனா எந்தப் பொருளிலும் உள்ள நிறத்தை ஸ்கேன் செய்து அதற்குரிய RGB அளவீடுகளை அறிந்து பேனாவில் மையைத் தானே தயாரித்துக் கொள்கிறதாம்.
காதலர்களுக்கு இனிமேல் கவலையில்லை, காதலியின் கன்னத்தைத் தொட்டே ஓவியம் தீட்டலாம்… காதல் ஓவியம் :)
வியக்க வைக்கும் இந்த கண்டுபிடிப்பு இதோ…
P1

















இதன் தொழில் நுட்பம் இதோ…
P4
















பச்சை நிறமே பச்சை நிறமே….
அழைத்ததும் வந்தாய் எந்தனிடமே…
P2

P3

பெஸ்ட் போட்டோ !

ஒரு சோப்பு குமிழி எப்படி உடைகிறது என எப்போதாவது ஆழமாகச் சிந்தித்ததுண்டா என என்னைக் கேள்வி கேட்க வைத்து விட்டன ரிச்சர்ட் ஹீக்ஸ் அவர்களுடைய புகைப்படங்கள்.
ஒரு நீர்க்குமிழி உடைந்து தெறிக்கும் அந்த மைக்ரோ வினாடியை துல்லியமாய் வியப்பூட்டும் விதமாகப் படம் பிடித்துள்ளார் அவர்.
படம் 1 : அப்பாவியாய் காற்றில் மிதக்கிறது குமிழி.
s1
படம் 2 : ஓரமாய் ஒரு சிறு தொடுதல். 
s2

படம் 3 : பாதி உடைந்தும், பாதி உடையாமலும் !!! வாவ் !.
s3
 படம் 4 : கடைசியில் அவ்ளோ தான் !!!!
s5

இறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் !

“ஐயோ… என்னால் அப்பாவாக முடியாதே” என இனிமேல் ஆண்கள் யாருமே புலம்பத் தேவையில்லை என்கிறது பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் ஒரு சூப்பர் ஆராய்ச்சி முடிவு.
விந்தணுவும் முட்டையும் இணைந்து கரு உருவாவது தானே இயற்கையின் நியதி. ஒருவேளை நோயினாலோ, வேறு ஏதேனும் காரணத்தினாலோ சரியான விந்தணுக்கள் இல்லாத ஆண்கள் என்ன செய்வது ?
கவலையை விடுங்கள் உங்கள் உடலிலுள்ள ஒரு “ஸ்டெம் செல்” போதும் உங்களுக்குச் சொந்தமான ஒரு விந்தணுவை உருவாக்கி விடலாம் என்பது தான் அந்த ஆராய்ச்சி சொல்லும் ஆச்சரிய சங்கதி. பிரிட்டனின் நியூகாசில் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்தி உலகின் புருவத்தை உயர வைத்திருப்பவர் பேராசிரியர் கரிம் நயிர்னியா.
இன்றைய தேதியில் ஆறு தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கிறது. பழைய காலத்தைப் போல குழந்தையில்லையேல் பழியை பெண்ணின் தலையில் போட்டு விட்டு தப்பிக்கவும் நவீன யுகம் வளர்ச்சி இடம் தருவதில்லை. ஒரு சோதனை போதும் யாருக்குப் பிரச்சினை, என்ன பிரச்சினை போன்ற சர்வ சமாச்சாரங்களையும் புட்டுப் புட்டு வைக்க.
குளோபல் வார்மிங், ஆபீஸ் டென்ஷன், பீட்சா, பர்கர், சீஸ் என கொழுப்பு உணவுகள், நோ எக்சர்சைஸ், மன அழுத்தம் இப்படி ஆயிரத்தெட்டு காரணங்கள் இதைச் சுற்றி. அதனால் இப்போதெல்லாம் ரேஷன் கடை வாசலில் நீளும் கூட்டத்தை விட அதிகமாய் கைனோகாலஜிஸ்ட் களின் வாசலில் கூட்டம் நீள்கிறது என்பது தான் நிஜம்.
உண்மையில், பிரச்சினை இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆண்களிடம் தான். ஜீவனில்லா விந்தணு, வீரியமில்லா விந்தணு, மூவ்மெண்ட் குறைவான விந்தணு, குறைவான எண்ணிக்கை இப்படி எக்கச்சக்கமான பிரச்சினைகள் இந்த உயிரணுவைச் sperm3சுற்றி. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாகக் கூடும் இந்த ஆராய்ச்சி என்பதே இப்போதைக்கு மருத்துவ உலகின் நம்பிக்கை.
உலக மருத்துவ வரலாற்றிலேயே முதன் முறையாக எனும் அடைமொழியுடன், ஒரு ஆண் கருவிலிருந்து ஒரு செல்லைப் பிரித்தெடுத்து, , அதை சோதனைக்கூடத்தில் ஸ்பெர்ம் ஆக வளரச் செய்திருக்கிறார் அவர். கருவிலிருந்து தான் செல்லை எடுக்க வேண்டுமென்றில்லை, ஆண்களின் கைகளிலிருந்தே ஒரு ஸ்டெம் செல்லைப் பிரித்து எடுத்து ஒரு ஸ்பெர்ம் செல்லை உருவாக்க முடியும் என நம்புகிறார் பேராசிரியர் கரிம் நயிர்னியா.
எளிதாய் சொன்னாலும் இதன் பின்னணியில் உள்ள உழைப்பு அசாத்தியமானது. ஸ்டெம் செல் ஒன்றை திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி, அங்கிருந்து சாதாரண வெப்பநிலைக்குக் கொண்டு வந்து வைட்டமின்கள் உதவியுடன் ஸ்பெர்ம் ஆக வளர்த்தெடுக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகிறதாம். இந்த விந்தணுவை IVF முறைப்படி நேரடியாக முட்டையில் செலுத்தினால் கரு தயார். ஆண்மையில்லை, விந்தணு இல்லை எனும் ஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை Spermசொல்லிவிடலாம்.
இவர் ஏற்கனவே இந்த ஆராய்ச்சியை எலிகளை வைத்து நடத்தி நிறைய எலிக்குட்டிகளை உருவாக்கினார் என்பது வியப்புச் செய்தி ! ஆனால் மனித விந்தணுவை வைத்து இன்னும் குழந்தையை உருவாக்கவில்லை, காரணம், பிரிட்டனில் அதற்கான அனுமதி இல்லை என்பது தான்.
ஏற்கனவே செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் முறை இருக்கிறது. ஆனால் அதற்கு ஸ்பெர்ம் யாராவது தானமாய் தரவேண்டும், முட்டை யாராவது தானமாய் தரவேண்டும். இரண்டையும் சேர்த்து ஏதோ ஒரு தாயின் கருவறையில் கருவாய் வளர்க்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் “ எனக்குள்ள ஓடற இரத்தம் தான் உனக்குள்ளயும் ஓடுது” என டயலாக் அடிக்க முடியாத உறுத்தல் பெற்றோருக்கு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் இந்த புதிய ஆராய்ச்சி மட்டும் நடைமுறைக்கு வந்தால், அச்சு அசலாக பெற்றோரின் குணாதிசயங்களுடன் இயற்கையாய் பிறக்கும் குழந்தைக்குரிய அத்தனை இயல்புகளோடும் செயற்கையாய் ஒரு குழந்தையை உருவாக்க முடியும் என்கிறார் கரீம்.
இந்த ஆராய்ச்சி ஸ்பெர்ம் தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கான கதவுகளை ஒரு சேரத் திறந்திருக்கிறது. உயிரணுக்கள் எப்படி உருவாகின்றன, வளர்கின்றன, என்னென்ன தன்மையில் வலுவடைகின்றன என அனைத்து நுண்ணிய விஷயங்களையும் இனிமேல் விரிவாக அறிய முடியும் என்பது மருத்துவ நம்பிக்கை. அப்படி நடந்தால் “வயாகரா” போல ஒரு மாத்திரை வந்து சர்வ உயிரணுப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த அவசர உலகில் இனிமேல் “அந்த” விஷயங்களெல்லாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்கள் தேவைப்படும் போது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது. “ஏங்க, உங்க கையைக் கொஞ்சம் நீட்டுங்க. ஒரு செல் வேணும், குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறேன்” என மனைவியர் சொல்லும் காலத்தை நினைத்தால் கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கிறது !
இப்படியெல்லாம் நடந்தால் ஆண்களுக்கு இங்கே என்ன வேலை என டென்ஷனாகாதீர்கள். இப்போதைக்கு ஒரு விந்தணுவை உருவாக்க ஒரு ஆணின் ஸ்டெம் செல் கட்டாயம் தேவை என்பதே நிலை. பெண்ணின் ஸ்டெம் செல்லைக் கொண்டு விந்தணு உருவாக்க முயன்ற முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. அப்படி பெண்ணின் செல்லில் இருந்தே ஒரு விந்தணுவும் உருவாக்க முடிகின்ற ஒரு காலம் உருவாகும் போது ஒரு குழந்தைக்கு பெண்ணே தாயுமானவளாகவும், தந்தையானவளாகவும் மாறும் வியப்பின் உச்சகட்டம் உருவாகும் !
இந்த ஆராய்ச்சியின் மிகவும் வியக்கத் தக்க விஷயமே இனிமேல் தான் இருக்கிறது. அதாவது இறந்து போன ஒருவருடைய உடலிலிருந்து கூட ஒரு செல்லை எடுத்து அதை வளரவைத்து ஸ்பெர்ம் ஆக மாற்றி அவருடைய சந்ததியை செயற்கையாகவே உருவாக்கிவிடலாம் என்பது தான் அது !
இறந்து பல வருடங்களானால் கூட இந்த செயற்கை ஸ்பெர்ம் உருவாக்குதல் சாத்தியம் எனும் தகவல் ஜுராசிக் பார்க் படம் போல திகிலூட்டுகிறது.