செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !
பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.
இந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.
அதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.
சக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது
இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.
தனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலுமுள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.
“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.
போதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.
இன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.
இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன. உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.
சில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.
கம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.
நவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.
நம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?
1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.
3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.
4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.
5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.
8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.
9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.
10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.
11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் !
12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.
13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.
14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.
எல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக