வெள்ளி, மே 25

சீரியஸா ஒரு சிரிப்பு சமாச்சாரம் !

தினமும் கொஞ்ச நேரம் குழந்தைகள் மனம் விட்டுச் சிரித்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள் என்கிறது ஆனந்தமூட்டும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.
சிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் எனும் செய்தியுடன் கூடவே, சிரிப்பு குழந்தைகளுக்கு தரும் “டானிக்” போன்றது எனவும் இந்த ஆராய்ச்சி சிரிப்பைக் குறித்து விவரித்து வியக்க வைக்கிறது.hero__3_1
தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைகின்றனவாம், இதனால் உடல் ஆரோக்கியமடைகிறது என்கின்றனர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள்.
அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஏதேனும் ஒரு நகைச்சுவைப் படத்தை அரைமணி நேரம் பார்த்தாலே போதும் என வழிமுறையையும் அவர்கள் சொல்லித் தருகின்றனர்.
மன அழுத்தம், நீரிழிவு நோய், உயர் குருதி அழுத்தம் போன்ற சிக்கல்கள் உள்ள பலருக்கு “தினம் அரை மணி நேரம் சிரிப்பு” என சோதனை நடத்தியதில் அவர்களுடைய உடலில் இருந்த அழுத்தம் தரக்கூடிய மூலக்கூறுகள் படிப்படியாகக் குறைந்து உடல் மிகவும் ஆரோக்கியமானதாக மாறிவிட்டதாம்.
சிரிக்கும் போதும், ஆனந்தமாய் உணரும் போதும் உடலில் நிகழும் வேதியல் மாற்றங்களே இந்த மாற்றத்துக்கான விதைகளைத் தூவுகின்றன. குறிப்பாக மகிழ்ச்சியளிக்கும் எண்டோர்பின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் பெர்க்.
மனம் விட்டுச் சத்தமாய் சிரிப்பது உடலிலுள்ள இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியையும் தருகிறது என்பது சிறப்பம்சமாகும். இதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் அதிகரிக்கின்றனவாம்.
அதே நேரத்தில் மிக அழுத்தமான அழுகாச்சிப் படங்களைப் பார்க்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் உடலுக்குத் தீமைகளை விளைவிக்கின்றனவாம். அப்படிப் பட்ட படங்களைப் பார்க்கும் போது இதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பெருமளவு குறைவது இதன் ஒரு காரணம் என்கின்றார் மருத்துவர் பெர்க்.
நல்ல ஆரோக்கியம் வேண்டுமா, தினம் ஒரு நல்ல நகைச்சுவைப் படம் பாருங்கள் என்கிறார் மெரிலண்ட் ஆராய்ச்சிக் கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் மில்லர்.

கருத்துகள் இல்லை: